மூதூர் நகரிலிருந்து தென்புறமாக ஏறத்தாழ நான்கு கிலோமீற்றர் தொலைவிலே திருகோணமலை – மட்டக்களப்பு ஏ-14 வீதியை அண்மித்துள்ள கிராமம்தான் ஜபல்நகர். இங்கு முஸ்லீம்களும் தமிழர்களும் நீண்டகாலமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். நெடுஞ்சாலைகளை முன்பு மைல் அளவுத்திட்டத்தில் வைத்திருந்த காலத்தில் 64ம் மைல்கல்லிலே அமைந்திருந்த காரணத்தால், 'அறுபத்தி நாலு' என்று இந்தப்பகுதி அழைக்கப்பட்டது. இங்கு அமைந்துள்ள ஓர் மிகமுக்கியமான நில அடையாளம்தான் 'மூணாங்கட்டை மலை' என அழைக்கப்படும் சராசரியாக 200 அடி உயரமுள்ள இந்தத் தொடர்குன்றுகள். இக்குன்றுகளைச்சூழ ஒருபுறம் மக்கள் குடியிருப்புகளும் மறுபுறம் மூதூர்வாழ் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் நெல்வயல்களும் காணப்படுகின்றன. மூதூர் பிரதேசசபையின் நிருவாக ஆளுகைக்குட்பட்ட இந்த மூணாங்கட்டைமலைக் குன்றானது மூதூர் மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒர் இயற்கை வளமாகும். இதனால்; அப்பிரதேசத்திலுள்ள மக்கள் தமது கட்டிட நிர்மாணம், வீதியபிவிருத்திப் பணிகள் போன்ற தேவைகளுக்கு அவசியமான பாறாங்கற்களை இக்குன்றிலிருந்தே உடைத்துப்பெற்று வருகின்றனர். இந்த பாறாங்கல்லுடைத்த...