Skip to main content

மூன்றாம் கட்டை மலையும் மதவெறியும்

மூதூர் நகரிலிருந்து தென்புறமாக ஏறத்தாழ நான்கு கிலோமீற்றர் தொலைவிலே திருகோணமலை – மட்டக்களப்பு ஏ-14 வீதியை அண்மித்துள்ள கிராமம்தான் ஜபல்நகர். இங்கு முஸ்லீம்களும் தமிழர்களும் நீண்டகாலமாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். நெடுஞ்சாலைகளை முன்பு மைல் அளவுத்திட்டத்தில் வைத்திருந்த காலத்தில் 64ம் மைல்கல்லிலே அமைந்திருந்த காரணத்தால், 'அறுபத்தி நாலு' என்று இந்தப்பகுதி அழைக்கப்பட்டது. இங்கு அமைந்துள்ள ஓர் மிகமுக்கியமான நில அடையாளம்தான் 'மூணாங்கட்டை மலை' என அழைக்கப்படும் சராசரியாக 200 அடி உயரமுள்ள இந்தத் தொடர்குன்றுகள். இக்குன்றுகளைச்சூழ ஒருபுறம் மக்கள் குடியிருப்புகளும் மறுபுறம் மூதூர்வாழ் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் நெல்வயல்களும் காணப்படுகின்றன.



மூதூர் பிரதேசசபையின் நிருவாக ஆளுகைக்குட்பட்ட இந்த மூணாங்கட்டைமலைக் குன்றானது மூதூர் மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒர் இயற்கை வளமாகும். இதனால்; அப்பிரதேசத்திலுள்ள மக்கள் தமது  கட்டிட நிர்மாணம், வீதியபிவிருத்திப் பணிகள் போன்ற தேவைகளுக்கு அவசியமான பாறாங்கற்களை இக்குன்றிலிருந்தே உடைத்துப்பெற்று வருகின்றனர். இந்த பாறாங்கல்லுடைத்தல் தொழில் இப்பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்து வாழும் எத்தனையோ ஏழைக்குடும்பங்களின் அன்றாட ஜீவனோபாயமாக இருந்து வருகின்றது.



இந்த நிலையில்தான் கடந்த 08.06.2012  வெள்ளிக்கிழமையன்று சேருவிலை விகாராதிபதி வண. சரணகீர்த்தி தேரோ வின் தலைமையிலே திடீரென பல வாகனங்களில் 20க்கும் அதிகமான பணியாட்கள் மூணாங்கட்டை மலைப்பகுதிக்கு வந்திறங்கினார்கள். அதனைத் தொடர்ந்து குன்றின் உச்சிக்குச் செல்வதற்குரிய படிக்கட்டுத் தொகுதியொன்றை அமைப்பதற்குரிய உபகரணங்களும் இரும்பு மரக்கிராதிகளும் வந்திறங்கின. அத்துடன் அதே 'மூணாங்கட்டை மலை'  குன்றின் அடிவாரத்திலே  சிறியதொரு வணக்கத்தல வடிவிலமைந்த கொட்டில் ஒன்றையும் நிறுவும் முயற்சிகளையும் ஆரம்பித்தனர்.


இதனால் அப்பிரதேசவாசிகள் குழப்பத்திற்கும் பீதிக்குமுள்ளானார்கள். இதனையடுத்து இந்த விடயம் ஊருக்குள் வேகமாகப்பரவியது. விளைவாக ஊர்ப்பிரமுகர்கள் ஒன்றுகூடி சர்வமதக்குழுவின் தவிசாளரின் தலைமையில் மலையடிவாரத்தில் ஆலய நிர்மாணத்திலே ஈடுபட்டுக்கொண்டிருந்த  பௌத்த விகாராதிபதியைச் சந்தித்துப்பேச முடிவு செய்தனர்.


விகாராதிபதிக்கும் அவரது குழுவினருக்கும் அவர்களது மேற்படி நடவடிக்கைகளின் தீய விளைவுகளை எடுத்துக்கூறி சுமுகமான ஒரு இணக்கத்துக்கு வருவதற்காக குறிப்பிட்ட இடத்திற்கு 12.06.2012 செவ்வாயன்று அவர்கள் சென்று பேசியபோது வெகுண்டெழுந்த சேருவில விகாராதிபதி,  தவிசாளரையும் ஊர்மக்களையும் நோக்கி கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக, 'நாங்கள் 2500 வருடங்களுக்கு முன்பிருந்தே இந்தநாட்டில் வாழ்பவர்கள். நீங்களோ 500 வருடங்களாகத்தான் இங்கே குடியேறியிருப்பவர்கள். நாங்கள் உரிய மேலிடத்தின் முறையான அனுமதியைப் பெற்றுத்தான் இதனைச் செய்து கொண்டிருக்கின்றோம். எங்களைத் தடுக்க உங்களுக்கு உரிமையில்லை. நாங்கள் நினைத்தால் இந்த நாட்டை விட்டே உங்களைத் துரத்துவோம்' என்றெல்லாம் சத்தமிட்டுள்ளார். இதிலிருந்தே அவர்களது உத்தேச பௌத்த ஆலய நிர்மாணிப்பின் நோக்கத்தினை  தெளிவாக அறியக்கூடியதாகவுள்ளது.


மூதூர் பட்டினத்திலே வாழ்ந்துவரும் ஏறத்தாழ 90 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த 300 அங்கத்தவர்களும் தமது ஆன்மீக பேணுதல்களை நிறைவேற்றுவதற்காக பௌத்த விகாரையொன்று ஏற்கனவே இருந்து வருகின்ற நிலைமையில் ஒரு சிங்களவர்தானும் குடியிருக்காத ஜபல்நகரிலே ஓர் பௌத்த ஆலயம் அமைப்பதற்கான தார்மீக நியாயம் எதுவுமே கிடையாது என்பதால் மூதூரிலுள்ள பல சிங்கள மக்களே ஆச்சரியப்படுமளவுக்கு சேருவிலை விகாராதிபதியின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இத்தனைக்கும் இந்த மலையடிவார பௌத்த ஆலயத்தின் நிர்மாணிப்பு வேலைகள் பற்றி மூதூரில் வாழும் சிங்களமக்களிடமோ மூதூர் பட்டின விகாராதிபதிக்கோ தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.


அதேவேளை, இந்த 'மூணாங்கட்டை மலை' குன்றுகளின் ஆக்கிரமிப்புக்கு வெறும் ஆலய நிர்மாணம் மட்டுமல்ல வேறு சில நோக்கங்களும் இருப்பதாக பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அதாவது  சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இந்தக்குன்றுகளில் பழங்காலப் புதையல்கள் இருப்பதாக இப்பிரதேச மக்களிடையே நீண்டகாலமாக ஓர் நம்பிக்கை நிலவி வந்திருக்கின்றது.



இதை உறுதிப்படுத்தும் விதமாக 1970 களிலே பௌத்த பிக்கு ஒருவர் புதையலை எடுப்பதற்காக உயிர்ப்பலி கொடுக்கும் நோக்கத்திலே இந்தக்குன்றின் உச்சிக்கு  குழந்தையொன்றைக் கடத்திச் சென்றுள்ள சம்பவத்தை பிரதேசமக்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும் தகவலொன்றை அடுத்து குன்றின் உச்சிக்கு விரைந்து ஏறிய அன்றைய மூதூர் பொலீசார் பிக்குவின் பலிபூஜையின் இறுதிநேரத்தில் அதிரடியாகப்புகுந்து அந்தக்குழந்தையைக் காப்பாற்றியதையும் குற்றவாளியான பௌத்த பிக்குவைக் கைதுசெய்து கொண்டுசென்றதையும் இன்றும் பல முதியவர்கள்  நினைவு கூருகின்றனர்.


எவ்வாறாயினும் இந்த மலையடிவார ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிச்சயமாக வேறு உள்நோக்கங்கள் கொண்டது என்பதை யூகிப்பதற்கு பெரிய புத்திசாலித்தனம் ஒன்றும் தேவையில்லை. இவர்கள் ஆலயம் அமைப்பதும் பின்பு அந்த இடத்திலே மெல்ல மெல்ல அத்துமீறிய குடியேற்றங்களைச் செய்வதும் அதன்பின்னர் அந்தப் பிரதேசங்களிலே காலங்காலமாக வாழ்ந்துவரும் சிறுபான்மையின மக்களின் இருப்பையே கேள்விக்குறியாக்குவதும் இலங்கையின் பிந்தியகால வரலாற்றுப் பாடங்கள். ஆனால், இவ்வாறான தூரநோக்கற்ற பல நடவடிக்கைளினால்தான் வளம்நிறைந்த நமது அழகிய தீவுதேசம் ஏறத்தாழ கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் இயல்பாக அடைந்திருக்கவேண்டிய பொருளாதார அபிவிருத்தியையும் செழிப்பையும் இழந்து நின்றது என்பதை இவர்கள் இன்னும் புரிந்து கொள்ளாதிருப்பதுதான் வியப்பைத் தருகின்றது.


அதேவேளை அரசுடன் இணைந்து செயற்படும் முஸ்லீம் அமைச்சர்களும் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் இதுகுறித்து காத்திரமான நடவடிக்கைகள் எதையும் மேற்கௌ;ளாமல் வாளாவிருப்பதையும் அறிய முடிகின்றது. பின்பு இந்த விடயம் குறித்து அண்மையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அமைச்சரொருவர் மூதூருக்கு வந்திருந்தார். மேற்குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக மூதூரில் நிகழ்ந்த சர்வமதக்குழு பிரதிநிதிகளின் சந்திப்பிலே அவர் உரையாற்றியபோது, 'அரசாங்கம் மூணாங்கட்டைமலை குன்றிலே ஆலயம் எதனையும் அமைப்பதற்கான எந்த அனுமதியையும் எவருக்கும் வழங்கியிருக்கவில்லை' என்று கூறிச்சென்றார்.
ஆகவே இதிலிருந்து உரிய மேலிடத்தின் அனுமதி பெற்றிருப்பதாக சேருவில விகாராதிபதி சர்வமதக்குழுவின் தவிசாளரிடம் கூறியது பொய்யான கூற்று என்று தெரியவருகின்றது. அவ்வாறாயின் அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செயற்பட்ட விகாராதியின்மீதும் மலைக்குன்றிலே பௌத்த கொடியை ஏற்றி தற்காலிகச் சிறுஆலயத்தையும் நிறுவிக்கொண்டிருக்கும் அவரது குழுவினர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று விசனத்துடன் வினவுகின்றார்கள் மூதூர் மக்கள்.


எது எவ்வாறாயினும் மூதூர்ப்பிரதேசத்தில் வாழும் ஏறத்தாழ அனைத்து மக்களும் அமைதியான வாழ்க்கையையே விரும்புபவர்கள். ஆனால், ஆக்கிரமிப்புச் சம்பவத்தைத் தெடர்ந்து இங்கு வாழும் சகல இனமக்களின் மனதிலும் சந்தேகமும் நிம்மதியின்மையும் ஏற்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. இந்த நிலை இவ்வாறே நீடிக்கும்போது பல விரும்பத்தகாத நிகழ்வுகள், அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளது. இனமுறுகல் யுத்தவடுக்கள் இன்னும் மாறாதநிலையிலும் அமைதியாகவே இருந்துவரும் இந்தப் பிரதேசம் மீண்டும் போர்க்களமாக மாறிவிடக்கூடிய நிலையொன்று ஏற்படுமாயின் அதன் விளைவுகள் படுமோசமாக இருக்கும் என்று அங்குள்ள சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் அஞ்சுகின்றனர்.


இந்தப்பிரதேசத்தின் மக்களைப் பிரதிநிதித்துவம்புரியும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் தங்களது அரசியல் வேறுபாடுகளையும் தனிப்பட்ட நலன்களையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு நிலைமையை எடுத்துக்கூறி, உடனடியாக இந்த இயற்கைவளம் மீதான மத ஆக்கிரமிப்பையும் அதனைத்தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும்; செயற்பாடுகளையும் நிறுத்தவேண்டும் என்பதே இந்த நாட்டில் சமாதானமும் சகஜவாழ்வும் நிலைபெறவேண்டும் எனவிரும்புவோர் அனைவரினதும் விருப்பமாகும்.

மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவார்களா பார்க்கலாம்!


- Jesslya Jessly 
(2012.06.20)
நன்றி : சிறகுகள் 

மூதூர் மூன்றாம் கட்டை மலையின் முன்னைய நடவடிக்கைகளின் படங்கள் சில
 

Comments

  1. dear brother rafsin, conguralulation ur social services & activities. also insa allah allah will help u both world & all the best.

    kindly one request please improve our 'muthur news' in latest web modify method & hope you.

    bye: mohamed rajeeth razideen-(kingdom of saudi arabia)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது

அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காது  என்று முன்னாள்   ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளின் ஈடுபட்;டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்;டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் ஒருவர் மக்களுக்கான அரசாங்கத்தை விமர்சிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கா? அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கா? ஆதரவு வழங்க போகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் இதன்போது அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமது ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. நாம் அந்த தருணத்தில் இது குறித்து பார்த்துக் கொள்வோம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மூதூரில், ஜமல் கிராம மக்கள் கவனயீர்ப்பு   ஆர்ப்பாட்டம்

மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி திருகோணமலை மூதூரில் ஜமல் கிராம மக்கள்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேச செயலக வளாகத்தில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையின் போது இடம்பெயர்ந்த தம்மை உரிய முறையில் சொந்த இடங்களில்  குடியமர்த்துமாறு இந்த மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஏனைய அடிப்படை வசதிகளை உரிய  வகையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரி, மகஜர் ஒன்றை மூதூர் பிரதேச  செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தனர். மக்களின் கோரிக்கை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து தேவையான  நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக மூதூர் பிரதேச செயலாளர் மொஹமட் யூசுப் Nfற்கு  தெரிவித்தார்.

சண்டைக்கு தயாரான  2 அரசியல்வாதிகள் - அமைதிப்படுத்திய மஹிந்த

வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்து வாக்களித்தால் ஊருக்கே வரவிடாமல்  செய்துவிடுவதாக பிரதியமைச்சர் முதுஹெட்டிகமவிற்கு மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலியில் நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் நிகழ்வொன்றில்  வைத்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக காலிமாவட்ட சுதந்திரக்கட்சி  ஆதரவாளர்களை சந்திப்பதற்கான கூட்டமொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்  ரமேஷ் பதிரண ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இதன்போதே பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிக்கு  குறித்த மிரட்டலை விடுத்துள்ளார். இதனையடுத்து பிரதேச சபை உறுப்பினருக்கும், பிரதியமைச்சருக்கும் இடையில் கடும்  வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நிலை வரை சென்றுள்ளது. இதனையடுத்து முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தியுள்ளார்.