செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2012 22:47
1993 ஜனவரி 25ம் திகதி மூதூர் ஒருபோதும் காணாத பேரிழப்பை சந்தித்தது. அன்றய தினம் திருகோணமலையிலிருந்து பி.ப. 2.30
மணிக்கு புறப்பபட்ட தனியார் படகு இன்று வரைக்கும் கரைசேரவில்லையென்பதே மூதூர் கண்ட மாபெரும் முதல் சோகமாகும். ஆன்றய தினம் 120 பேர்களுடன் பயணித்த அப்படகில் இருந்தவர்களில் சுமார் 100 பேர் வரை ஜலசமாதியானார்கள் என்பது இன்றும் கண்ணீர் சிந்தும் காவியமாக மூதூர் மக்கள் ஒவ்வொருவரினதும் மனங்களில் நீங்கா நினைவு பெற்றுள்ளது. கடற்கரையையும் பாதாள மலைப்பகுதியையும் காணும் மக்கள் ஜலசமாதியானோர்களின் ஞாபகத்தில் வாடுவதுண்டு.
1993ம் ஆண்டின் பின்னர் தனியார் படகுச் சேவைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் இச்சேவையை கொண்டுவந்த பின்னர் பலியானோர்களின் எண்ணிக்கை இல்லை என்றோ அல்லது மிகக் குறைவானது என்றோ கூறலாம். இக்காலப்பகுதியிலேயே நவீன கப்பல் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன. பலிகளுக்குள்ளும் இழப்புக்களுக்குள்ளும் இம்மக்கள் கடல் வழிப் போக்குவரத்தை தமது பிரதான போக்குவரத்தாகக் கொண்டனர்.
இவ்வாறு கடலில் சென்று வரும்போதும் அங்குள்ள காட்சிகளையும் கண்டு வரும்போதும் மனதுக்கு இனிமையாக இருப்பதுடன் சந்தோசத்தையும் கொடுத்துவந்தது. இதனால்தான் யுத்தத்தின் பின் இப்போக்குவரத்து மிகவும் முக்கியம் பெற்றதுடன் உல்லாசப்பயணிகளினாலும் பெரிதும் கவரப்பட்டது. இதனால் அதிக வருமானத்தை அரச நிறுவனங்கள் பெற்று வந்ததுடன் இது மூதூர் மக்களின் வாழ்வாதாரத்துறையினையும் வித்தியாசமான வழியில் முன்னேற்ற வாய்ப்பளித்தது.
தற்போது இப்படகு மற்றும் கப்பல் சேவைகள் முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டுள்ளது. இது பாரம்பரிய போக்குவரத்துச் சேவைக்கு ஓர் சமாதி கட்டுவது மாத்திரமின்றி மூதூரின் வருமானத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனை மீள சேவையில் ஈடுபடுத்தும் போது மக்களின் பொதுவாக மீனவச் சமூகத்தின் வருவாயில் மாற்றம் ஏற்படும் என்பது மாத்திரமின்றி உல்லாசப்பயனத்துறையின் வளர்ச்சியிலும் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
நன்றி: முத்தூரான் பாயிஸ்
Comments
Post a Comment