(பழுளுல்லாஹ் பர்ஹான்) நன்றி : ஜப்னா முஸ்லிம்
வடமாகாண சபை தேர்தல் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களின்
மீள்குடியேற்றம், வாழ்வாதாரப் பிரச்சினை என்பவற்றை எவ்வாறு நோக்கும் என
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஷூறா சபை உறுப்பினரும் பொறியியலாளருமான
அப்துர் ரஹ்மான், தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில்,
வட மாகாண சபைத் தேர்தலைப் பொறுத்தவரையில் சர்ச்சைக்குரிய இரண்டு
நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. வடமாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படவே கூடாது
என ஒரு தரப்பினர் கூறுகின்ற அதேவேளை இன்னுமொரு தரப்பினரோ தேர்தல்
நடாத்தப்படும் பட்சத்தில் அச் சபைக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களே
வழங்கப்பட வேண்மென கூறுகின்றனர். என்னைப் பொறுத்தவரையில் வடமாகாண சபைத்
தேர்தலை நடாத்துவது என்பது தமிழ் சமூகத்திற்கு அரசாங்கமோ அல்லது வேறு
எவருமோ கருணையின் அடிப்படையில் செய்யும் காரியமல்ல. மாறாக, அது
அரசாங்கத்தினது மாத்திரமன்றி முழு தேசத்தினதும் கடமையாகும்.
ஏனெனில் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முயல்கிறோமே தவிர, அதிகாரப் பகிர்வின்
அடிப்படையில் சிறுபான்மை மக்களையும் தேசிய நிர்வாகத்தில் பங்கேற்கச் செய்து
தேசத்தை கட்டியெழுப்புவோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையிலேயே பாரிய விலை
கொடுத்து பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டது.
இந்நாட்டின் அனைத்து மக்களும் இதனை ஏற்றுக் கொண்டார்கள். எனவேதான் வடமாகாண
சபை தேர்தலை நடாத்துவதென்பது அரசாங்கத்தினது கடமை என்பதற்கும் அப்பால்
தேசத்தின் கடமையாகவும் மாறியிருக்கின்றது.
இந்நிலையில்தான் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் சில இத்தேர்தலுக்கு
முட்டுக்கட்டை போடும் நடவடிக்கைகளுடன் களத்தில் குதித்திருக்கின்றன.
வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம், சிங்கள மக்கள் அனைவரும் முழுமையாக
குடியேற்றப்படும் வரை தேர்தல் நடைபெறக் கூடாது என்ற நிலைப்பாட்டில்
சிலரும், 13 ஆவது சீர்திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு
கிடைக்கும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட முக்கிய சில விடயங்களை நீக்கி
விட்டே வடமாகாண சபை அமைக்கப்பட வேண்டும் என சிலரும் களத்தில்
குதித்திருக்கின்றனர்.
இவை நேர்மையான, நியாயமான நிலைப்பாடுகளாக இல்லை. யுத்த காலத்திலும் அதற்குப்
பின்னரான காலத்திலும் எல்லா வகையான தேர்தல்களும் வடக்கில் நடந்தே
இருக்கின்றன. அப்படி இருக்கையில் வெளியேறிய மக்கள் அனைவரும் குடியேறிய
பின்னர்தான் வடமாகாண சபைத் தேர்தல் நடாத்த முடியும் என கூறுவது அரசியல்
வஞ்சகத் தனம் கொண்ட நடவடிக்கையேயாகும்.
மேலும் 13 ஆவது திருத்தச் சட்டம் மூலம் வழங்கப்பட்டிருக்கின்ற அதிகாரங்களை
துஷ்பிரயோகம் செய்வதிலிருந்து பாதுகாக்கின்ற ஏற்பாடுகள் அனைத்தும்
சட்டத்திலும், யாப்பிலும் இருக்கின்றன. மத்திய அரசால் நியமிக்கப்படும்
ஆளுனரின் முழுமையான கண்காணிப்பின் கீழும் கட்டுப் பாட்டிலுமே மாகாண சபைகள்
இயங்குவதை நாம் பார்க்கிறோம்.
ஒரு மாகாண சபையானது தனது அதிகார வரம்புகளை மீறி நாட்டின் இறைமைக்கும்
பாதுகாப்பிற்கும் ஒருமைப் பாட்டிற்கும் பாதகம் ஏற்படும் வகையில் செயற்பட
முனைகின்றபோது அதனை கலைத்து விடுகின்ற அதிகாரத்தையும் மத்திய அரசு
கொண்டுள்ளது. இப்படியான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் இருக்கின்றபோது 13
ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் திருத்தி விட்டுத்தான் வட மாகாண சபைத்
தேர்தலை நடாத்த வேண்டுமென்பது அரசியல் வஞ்சகத் தனம் கொண்ட செயற்பாடேயாகும்.
இங்கு துரதிஷ்டம் என்னவென்றால் அரசாங்கம் கூட இந்த நிலைப்பாடுகளை
அனுசரித்து நடந்துகொள்கிறது அல்லது அரசாங்கத்தினது நிலைப்பாட்டினைத்தான்
இந்த சர்ச்சைகளை உருவாக்குபவர்கள் முன்வைக்கிறார்கள் எனவும் எண்ணத்
தோன்றுகிறது.
தமக்கு விருப்பமான நிலைப்பாடொன்றிற்கு எதிராக பங்காளிக் கட்சிகள்
கருத்துக்களை தெரிவிக்கின்றபோது அரசாங்கம் கடந்த காலங்களில் எவ்வாறு
நடந்துகொண்டுள்ளது என்பது நமக்குத் தெரியும். அந்த வகையில் வட மாகாண சபைத்
தேர்தலை நடாத்தி முழுமையான அதிகாரப் பகிர்வினை செய்வதற்கு அரசாங்கம்
நேர்மையாக எத்தணிக்கவில்லை என்பதனையே இது நிரூபிக்கிறது.
இந்த இடத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரின் நிலைப்பாடுகளும்
கவலையளிக்கிறது. சமூக ரீதியாக சிந்திக்க வேண்டியவர்கள் வெறும் அரச பங்களிக்
கட்சிகளாவே தொடர்ந்தும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போதும் கூட தமிழ் முஸ்லிம் சமூகங்கள்
இணைந்து பல பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளக் கூடிய நல்ல சந்தர்ப்பத்தை
அவர்கள் நழுவவிட்டார். விளைவாக கிழக்கு மாகாண சபை ஆட்சியை அமைக்கக் கூடிய
முஸ்லிம்களின் அரசியல் பலம் அதற்கும் பிரயோசனமற்ற செல்லாக் காசாக மாறியது.
அதுபோன்றே வட மாகாண சபைத் தேர்தல் எனும் இச்சந்தர்ப்பத்தில் இனிமேலாவது
அரசாங்கத்தின் செல்லப் பிள்ளைகளாக அல்லாமல் முஸ்லிம் சமூகத்திற்கு
விசுவாசமானவர்களாக செயல்பட முன்வர வேண்டும்.
நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் வட மாகாண முஸ்லிம்களின்
மீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய நல்ல
சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழ் அரசியல் தரப்புகள் குறிப்பாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு வடமாகாண
முஸ்லிம்கள் விடயத்தில் தமது நல்லெண்ண நிலைப்பாடுகளை தெளிவாக முன்வைக்க
வேண்டும்.
Comments
Post a Comment