"வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை"
இன்றைய காலைப் பொழுதின் ரயில் பயணத்தில் என் காதில் அமர்ந்து கொண்ட அந்த வரிகளுக்குச் சொந்தக்காரி "மாலையில் யாரோ மனதோடு பேச". ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் சிங்கப்பூர் ஒலி வானொலியின் இளையராஜாவின் பாடல்கள் இசை விருந்தை ஒலிப்பதிவு செய்து கேட்ட போது இந்தப் பாடலும் வந்து சேர்ந்தது.
நம் சினிமாவின் அழகியலே உணர்வுகளுக்குப் பாடல் வழியே அர்த்தம் கற்பிப்பது. அதுவும் காதல் வயப்பட்ட பெண்ணின் மனநிலையை ஆதி முதல் வித விதமான பாட்டுச் சித்திரங்களாக அழகுறத் தந்திருக்கிறார்கள்.
அந்த வகையில் "மாலையில் யாரோ மனதோடு பேச" எனது சிந்தனையைக் கிளறி இசைஞானி இளையராஜாவின் இசையில் முன்னணிப் பாடகிகள் பாடிய தனிப்பாடல்களில் தேர்ந்தெடுத்தவற்றை மனதில் ஓட்டிப் பார்த்தேன். இவற்றில் ஒரே அலைவரிசையில் வந்து சேரும் பாடல்களாகப் பதினாறு பாடல்கள் திரண்டன. இந்தப் பாடல்களில் மெதுவான ஓட்டமும் உண்டு இலேசான துள்ளிசையும் உண்டு. ஆனால் இவை எல்லாவற்றையுமே காதல் வயப்பட்ட பெண் தனக்குள் பாடி இன்பம் சுகிக்கும் உணர்வின் அலையாகவே ஒரு சேரப் பார்க்கிறேன். இங்கே இசையும் சேர்ந்து அந்தப் பெண்ணின் உணர்வின் வடிகாலாக அமைகிறது.
ஒரு சூழலுக்குப் பொருந்தக் கூடிய வகையில் ஒவ்வொரு பாடகியும் என்ன மாதிரிப் பாடியிருப்பார்கள் என்ற சின்னக் கற்பனையையும் ஏற்படுத்திப் பார்த்தேன். காட்சி வடிவம் கண்ட போது சிலது முரணான சூழலுக்கு அவை படம் பிடிக்கப்பட்டாலும் இந்த எல்லாமுமே ஒரே பெண்ணின் தனக்குள் மட்டும் பகிர்ந்து கொண்டாடும் உணர்வுப் பெருக்காய் ஒரே நதியில் சங்கமிக்க, வீடு நோக்கிப் பயணிக்கிறேன் இதோ இந்தப் பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டே.
இதுவும் இன்னொரு ரயில் பயண ஆக்கம்.
Comments
Post a Comment